திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஆறாம் திருமுறை |
6.91 திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் |
பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்
தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
|
1 |
பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை
வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
அருமருந்தை ஆமா றறிந்தேன் னுள்ளந்
தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
|
2 |
கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்
கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமர ரேத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி
உலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்த
மயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
|
3 |
பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்
புண்ணியனைப் புவனியது முழுதும் போக
உமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் றூணை
உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந்
திகழெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
|
4 |
பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னை
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
|
5 |
கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர்
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு
மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
|
6 |
நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை
நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்
மன்னுயிரும் என்னுயிருந் தானாஞ் செம்பொன்
ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும்
அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்
சேணெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
|
7 |
அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை
ஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன்
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
|
8 |
அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி
அறியாதார் தந்திரத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
புண்ணயனைப் பொருதிவரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
|
9 |
அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றி
அடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை ஏழுலகு மாக்கி னானை
எம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |